செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது - 40 பவுன் நகை மீட்பு

Published On 2018-10-04 16:26 GMT   |   Update On 2018-10-04 16:26 GMT
தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டை நோட்டம் பார்த்து திருடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. இதையடுத்து அந்த கொள்ளை கும்பலை பிடிக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் மானாமதுரை சப்-இன்ஸ்பெக்டர் முகமதுதாரிக் தலைமையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மானாமதுரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அந்த வழியில் நின்றுக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சிவகங்கை, கல்லல், மானாமதுரை, சிப்காட் பகுதி, நாச்சியார்புரம், குன்றக்குடி, மணக்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் மானாமதுரையை அடுத்த கீழக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகநாதன்(வயது24), முருகப்பாஞ்சான் கிராமத்தை சேர்ந்த மணிக்காளை(25) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது அவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். 
Tags:    

Similar News