செய்திகள்
கொளப்பலூர்-சிறுவலூர் ரோட்டில் தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

கோபி அருகே கனமழையால் தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு

Published On 2018-10-01 11:00 GMT   |   Update On 2018-10-01 11:00 GMT
கோபி அருகே பெய்த கனமழையால் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர், பள்ளிபாளையம், கொளப்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.

இதனால் அந்த பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கொளப்பலூர்-சிறுவலூர் ரோட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.

எனவே இந்த பாலத்தின் அருகே வாகனங்கள் செல்வதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தரைப்பாலத்தின் மீது மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டது.

எனவே பெருந்துறை, சிறுவலூர், திங்களூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்களும், அங்கிருந்து கொளப்பலூருக்கு வரும் வாகனங்களும் கெட்டிசெவியூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

கோபி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குளங்கள், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இது அந்த பகுதி விவசாயிகளையும், பொது மக்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

டிஎன்.பாளையம் அருகேயும் கன மழை பெய்தது. இதன் காரணமாக அரக்கன் கோட்டை வாய்க்காலில் வெள்ளம் காரணமாக உடைப்பு ஏற்பட்டு வயல் வெளிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

அதோடு அருகிலுள்ள ஆலமரம் சாய்ந்து வாய்க்காலில் சேதத்தை ஏற்படுத்தியது. ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாய்ந்த மரத்தின் கிளைகளும், கழிவுகளும் அகற்றுப்பட்டன.

புஞ்சை புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காராபாடி, காவிலிபாளையம், பொன்னம்பாளையம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பவானிசாகர் ரோட்டில் உள்ள பொன்னம்பாளையத்தில் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. #tamilnews
Tags:    

Similar News