செய்திகள்

உத்தமபாளையம் அருகே மீண்டும் தோட்டங்களில் புகுந்த மக்னா யானை

Published On 2018-10-01 14:36 IST   |   Update On 2018-10-01 14:36:00 IST
தேவாரம் அருகே மீண்டும் ஆட்கொல்லி யானையான மக்னா வயல்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் அச்சதடைந்துள்ளனர். #MagnaElephant

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தோட்டங்களில் கடந்த சில மாதங்களாக மக்னா எனும் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருகிறது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தோட்டங்களில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதுடன் காவலாளிகளையும் தாக்கியது.

இதில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகளை வரவழைத்தனர். அதன் பிறகு ஒற்றை யானை நடமாட்டம் அடியோடு நின்றது.

2 மாதங்களாக தேவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கும்கி யானைகள் மீண்டும் டாப் சிலிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டன. இதனால் ஒற்றை யானை மீண்டும் அட்டகாசத்தை தொடங்கியுள்ளது.

நேற்று மூனாண்டிப்பட்டி, தேவாரம் ஆகிய பகுதிகளில் புகுந்து சேதப்படுத்தியது. இன்று காலை தாழையூற்று பகுதியில் உள்ள மணி என்பவரது தோட்டத்தில் புகுந்து அங்கிருந்த 5 தென்னை மரங்களை முறித்தது. மேலும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கப்பைக்கிழங்கு செடிகளையும் சேதப்படுத்தியது.

கும்கி யானைகள் இங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த போது ஒற்றை யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதால் இப்பகுதியில் நிரந்தரமாக அதனை விரட்டும் வரை கும்கி யானைகளை தங்க வைக்க வேண்டும்.

இவ்வையெனில் யானையை விரட்டுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News