செய்திகள்

முதியவரை மிரட்டி ரூ.10 லட்சம் செக் பறிப்பு- போலீஸ் இன்ஸ்பெக்டர், நடிகை மீது கமி‌ஷனரிடம் புகார்

Published On 2018-10-01 07:34 GMT   |   Update On 2018-10-01 07:34 GMT
சென்னையில் முதியவரை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் டிவி நடிகை மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதியவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை:

சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் திலகவதி நகரில் வசித்து வருபவர் முத்தையா (72). கட்டுமான தொழில் செய்து வரும் இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் டி.வி. நடிகை ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.

கடந்த 29-ந்தேதி இரவு 11 மணியளவில் என் மகனுக்கு தெரிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் பாண்டியன், அவரது மனைவி டி.வி. நடிகை சஜினி மற்றும் ரவுடிகள் சிலர் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தனர்.

என்னையும் என் மகன் கிறிஸ்டோபரையும் காசிமேடு, அண்ணாநகர், ரவுடிகள் மூலம் கடத்தி சென்று கொலை செய்து விடுவதாக கூறி ரூ.10 லட்சம் உடனடியாக தரவேண்டும் என்று மிரட்டினர்.

எதற்காக இந்த பணம் தர வேண்டும் என்று கேட்டதற்கு உன் மகன் உயிரோடு வேண்டும் என்றால் கேட்ட பணத்தை கொடு, இல்லையெனில் ரவுடிகளை வைத்து உன் குடும்பத்தை தீர்த்து கட்டிவிடுவேன் என்று மிரட்டினர்.

பணத்தை இப்போது தரவில்லை என்றால் என்னையும் என் மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதையடுத்து உயிருக்கு பயந்து ரூ.10 லட்சத்துக்கு ‘செக்’ எழுதி கொடுத்தேன். அதிகாலை 2 மணி வரை என்னை கத்தி முனையில் மிரட்டியதால் நான் வேறுவழி தெரியாமல் பயந்து செக்கினை கொடுத்து விட்டேன்.

என்மகன் வீட்டிற்கு வந்த பிறகு நடந்த சம்பவத்தை கூறினேன். போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எந்த நோக்கத்திற்காக அவர்கள் எங்களிடம் இப்படி நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

அவர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் தாம்சன் பாண்டியன், டி.வி. நடிகை சஜினி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News