செய்திகள்

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் - முதல்வர் பழனிசாமி

Published On 2018-09-30 14:21 GMT   |   Update On 2018-09-30 14:21 GMT
சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என தெரிவித்தார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami
சென்னை:

சென்னையில் நந்தனம் பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

ஆங்கிலேயருக்கு பிறகு அதிக முறை ஜார்ஜ் கோட்டையை ஆண்ட கட்சி அதிமுகதான். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆடம்பர விழா அல்ல; மக்களுக்கு பயனளிக்கும் விழா. அதிமுக அரசு மக்களுக்கான அரசு; மக்களுக்காக பாடுபடுகின்ற அரசு.

யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது. குடிசைகள் இல்லாத சென்னையை உருவாக்கி வருகிறோம்.

அவர் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். முதன்முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பொழுது ரூ.330 கோடி விவசாய கடனை ரத்து செய்தவர்.

திரைத்துறையில் இருந்து வந்தவர்களில் முதல் அமைச்சராக மக்கள் ஏற்று கொண்டது எம்.ஜி.ஆரையே.  தமிழகத்தின் சத்துணவு திட்டத்தினை மத்திய அரசே பின்பற்றுவதற்கு எம்.ஜி.ஆர். காரணம்.

எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. தமிழக மக்களுக்காக கிருஷ்ணா குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தியவர். தனது சொத்துகளை பொது நலத்திற்கு விட்டு சென்றவர்.

நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் மெட்ரோ நகரங்களில் ஒன்றான சென்னை முதலிடம் வகிக்கிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னையில் குவிந்து வருகிறார்கள்.



சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும்.

ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கி.மீ நீளமுள்ள மவுண்ட் - பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்.

எம்.ஜி.ஆர். என்ற சக்தி தோன்றியிருக்கா விட்டால் தமிழகத்தின் கதி நிர்க்கதியாகி இருக்கும். எம்.ஜி.ஆர். கட்சி அவரது படம் போன்று 100 நாட்களே இருக்கும் என்றவர்கள் கோட்டைக்கே வர முடியவில்லை.

எதிர்ப்புகளை எல்லாம் மீறி சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவை நிறுத்த தீட்டப்பட்ட சதி முறியடிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami
Tags:    

Similar News