செய்திகள்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு கமல்ஹாசனை அழைக்கவில்லை என்பதை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-09-29 06:35 GMT   |   Update On 2018-09-29 06:35 GMT
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு கமல்ஹாசனுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்று கூறுவதை நிச்சயமாக நான் மறுக்கிறேன். அவர் சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #Kamalhaasan
சென்னை:

சென்னை தங்க சாலையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறாரே?



பதில்:- அழைப்பிதழ் எல்லோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் மாறுபட்ட கருத்து இல்லை. இது அரசு விழா.

எம்.ஜி.ஆர். கலை உலகில் யாரெல்லாம் அவரோடு நெருங்கி இருந்தார்களோ அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

எனவே அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்று கூறுவதை நிச்சயமாக நான் மறுக்கிறேன். அவர் சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை.

இது அரசு விழா என்ற காரணத்தினால் கட்சி சார்பாக எல்லோரையும் அழைக்க முடியாது. அருமை நண்பர் தொல்.திருமாவளவன் கூட விழாவுக்கு அழைத்தால் வருவேன் என்று சொன்னார்.

நிச்சயமாக இது நல்ல விசயம். எங்களோடு அவர் நெருங்கி வருகிறார் என்பதைத்தான் எடுத்து காட்டுகின்றது. எனவே அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்பதால் இதை அரசு முடிவு செய்து அழைப்பிதழ் அனுப்புகிறது. நான் முடிவு செய்ய முடியாது. அந்த அடிப்படையில் தொல். திருமாவளவனாக இருந்தாலும், அதே போன்று மற்ற கட்சிகளாக இருந்தாலும் சரி, அரசு முடிவு செய்கிற பட்சத்திலே திருமாவளவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே அழைப்பிதழ் கொடுப்பது பற்றி அரசு ஆலோசித்து முடிவு செய்யும்.

கே:- நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் அனுமதியின்றி அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதே?

ப:- பேனர்கள் அனைத்தும் அனுமதி பெற்றுதான் வைக்கப்பட்டுள்ளது. எல்லோருமே அனுமதி வாங்கித்தான் பேனர் வைத்துள்ளோம்.

எங்கேயாவது அனுமதி பெறாமல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்தால் அதை அகற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #Kamalhaasan

Tags:    

Similar News