செய்திகள்

ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - நெல்லை, தூத்துக்குடியில் 1750 மருந்து கடைகள் அடைப்பு

Published On 2018-09-28 10:20 GMT   |   Update On 2018-09-28 10:20 GMT
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்து கடைகளை அடைத்து இன்று போராட்டம் நடத்தினார்கள். நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களிலும் இன்று அனைத்து மருந்து கடைகளும் அடைக்கப்பட்டன.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1200 மருந்து கடைகள் மற்றும் மொத்த விற்பனை மருந்தகங்கள் உள்ளன. இதில் நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் சுமார் 400-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன.

பிரபல பெரிய ஆஸ்பத்திரிகளின் உள்ளே செயல்படும் மருந்து கடைகளும் பெரும்பாலானவைகள் இன்று அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் டாக்டர்கள் மருந்து மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்தனர்.

வெளிநோயாளிகள் மருந்து கடைகளுக்கு சென்று மாத்திரை வாங்க முடியாமல் தவித்தனர். அதுபோல ஏற்கனவே டாக்டர்கள் எழுதிக்கொடுத்த மருந்து சீட்டுக்களுக்கும், இன்று மருந்துகள் வழங்கப்படவில்லை. இதனால் பெருமளவு வெளிநோயாளிகள் பரிதவித்தனர்.

அரசு மருந்தகங்கள், அம்மா மருந்தகங்கள், மத்திய அரசின் குறைந்தவிலை மருந்து கடைகள் போன்றவை இன்று வழக்கம் போல் திறந்து இருந்தன. இதனால் அங்கு இன்று கடும் கூட்டம் அலைமோதியது. நெல்லை மேம்பாலம் அருகே உள்ள கூட்டுறவு பேரங்காடி ‘அம்மா’ மருந்தகத்தில் ஏராளமானவர்கள் வெளியே காத்து நின்று மருந்து மாத்திரைகள் வாங்கி சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 550 க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் இன்று அடைக்கப்பட்டன. இதனால் அங்கும் வெளி நோயாளிகள் மருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அம்மா மருந்தகங்கள் அனைத்து பகுதியிலும் திறந்து இருந்தது.

நாளை அனைத்து மருந்து கடைகளும் வழக்கம் போல் திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News