செய்திகள்

பயணிகள் ரெயில் தாமதமாக வருவதை கண்டித்து தொழிலாளர்கள் மறியல்

Published On 2018-09-26 17:09 GMT   |   Update On 2018-09-26 17:09 GMT
பயணிகள் ரெயில் தாமதமாக வருவதை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர்:

திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு கோவை, சூலூர், சோமனூர், இருகூர், பெருந்துறை, ஈரோடு, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்கள் தினமும் காலையில் ரெயிலில் வேலைக்கு சென்று விட்டு மாலை ரெயில் மூலம் வீடு திரும்புவார்கள். இதற்காக மாதாந்திர பாஸ் வாங்கி வைத்துள்ளனர்.

கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி தொழிலாளர்கள் பெரும்பாலும் நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் பயணிகள் ரெயிலில் தான் மாலை வேலை முடிந்து வீடு திரும்புவார்கள்.

நாகர்கோவில் - கோவை பயணிகள் ரெயில் வழக்கமாக இரவு 7.10 மணிக்கு திருப்பூர் வர வேண்டும். ஆனால் இந்த ரெயில் கடந்த சில நாட்களாக இரவு 9.30 மணி, 10 மணிக்குதான் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மாலை வேலை முடிந்து சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் காத்து கிடந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் நேற்று இரவு பெங்களூருவில் இருந்து கோவை வந்த உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். ஏராளமான தொழிலாளர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இது குறித்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது தொழிலாளர்கள் நாகர்கோவில் பயணிகள் ரெயில் மாலை 6.30 மணிக்கு ஈரோடு வந்து விடுகிறது. ஆனால் திருப்பூருக்கு வழக்கத்தை விட 2 மணி நேரம் தாமதமாக தான் வருகிறது என குற்றம் சாட்டினார்கள்.

அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள். பயணிகள் ரெயில் குறித்த நேரத்தில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News