செய்திகள்

சேலம் அருகே தனியார் பஸ்சை வழிமறித்து டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்

Published On 2018-09-26 21:32 IST   |   Update On 2018-09-26 21:32:00 IST
சாலையில் முந்திச் செல்ல முயன்ற தகராறில் தனியார் பஸ்சை வழிமறித்து டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காடையாம்பட்டி:

சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலை சென்றது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் நல்லம் பள்ளி பகுதியை சேர்ந்த மாதையன் மகன் பாக்கியராஜ் என்பவர் ஓட்டினார். காலை 9 மணிக்கு தீவட்டிபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று சென்றது. அதே நேரத்தில் தீவட்டிப்பட்டி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த சேட்டு மகன் மாதேஷ் (வயது 23) என்பவர் மினிவேனை ஓட்டிச் சென்றார்.  

தளவாய்பட்டி  ஆஞ்சநேயர் கோவில் அருகில் செல்லும்போது மினிவேன், தனியார் பஸ்சை முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. 
இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த டிரைவர் பாக்கியராஜ், மாதேஸ்சை தாக்கியதாக தெரிகிறது.

பின்னர், தனியார் பஸ் தர்மபுரிக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு விட்டு திரும்ப சேலத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தன்னை அடித்த சம்பவம் குறித்து மாதேஷ் தனது உறவினர்களிடம் கூறினார். இதனால் பதிலுக்கு பதில் அவரை தாக்குவதற்காக மாதேஷ் மற்றும் அவரது தந்தை சேட்டு மற்றும் உறவினர்கள் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.
தனியார் பஸ் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் வந்தபோது பஸ்சை தடுத்து நிறுத்தி, பஸ்சுக்குள் ஏறி பாக்கியராஜ் மற்றும் கண்டக்டர் கோபி ஆகியோரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து தீவட்டிபட்டி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News