செய்திகள்

டீசல் விலை உயர்வை கண்டித்து அக்டோபர் 8-ந்தேதி உண்ணாவிரதம்- விசைப்படகு மீனவர்கள் சங்கம் முடிவு

Published On 2018-09-25 10:55 GMT   |   Update On 2018-09-25 10:55 GMT
டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்டோபர் 8-ந்தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக 13 மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களை சேர்ந்த விசைப் படகு மீனவர்களின் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக விசைப்படகு மீனவர்கள் நலச்சங்க மாநில செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.முக. தலைவர் கருணாநிதி மற்றும் ஒக்கி புயலில் இறந்த மீனவர்களுக்கும், மறைந்த முன்னாள் மீனவர் சங்க நிர்வாகிகளுக்கும் இரங்கல் அனுசரித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

டீசல் விலை உயர்வால் தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தொழில் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டு எங்களது வாழ்வாதாரம் அழியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் மீனவர்களை அழிவில் இருந்து காப்பாற்ற மீனவர்களுக்கு வழங்குகின்ற டீசலை உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் சேதம் அடைந்து உள்ளன, நல்ல நிலையில் உள்ள படகுகளை மீட்டு கொடுப்பது என்றும் முழுமையாக சேதம் அடைந்த படகுகளுக்கு மத்திய-மாநில அரசுகள் ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். இலங்கை அரசு அத்துமீறி 3 படகுகளை அரசுடமையக்கியதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் இதுபோன்ற நட்பு நாடுகளுக்கு உதவாத சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தீர்மானங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்றால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை முதல் கட்டமாக வேலை நிறுத்தம் செய்வது,

2-வது கட்டமாக அடுத்த மாதம் அக்டோபர் 8-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, படகு உரிமை சான்றிதழ்களை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பது,

இதன்பிறகும் அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் ஒத்துழைப்புடன் 13 கடலோர மாவட்ட மீனவர்களும் இணைந்து போராட்டம் நடத்துவது, எதிர்க்கட்சி துணையுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News