ஒண்டிமுனியும் நல்லபாடனும்- திரைவிமர்சனம்
கிராமத்து விவசாயி பரோட்டா முருகேசனின் மகன் விஜயன் தியா சிறிய வயதில் தவறி கிணற்றுக்குள் விழுந்து விடுகிறார். உயிருக்கு போராடும் விஜயன் தியா உயிர் பிழைக்க வேண்டி ஒண்டிமுனி சாமியிடம் மகனை காப்பாற்றி கொடு உனக்கு நேர்த்திக்கடனாக ஆட்டுக்குட்டியை பலி கொடுக்கிறேன் என வேண்டுகிறார் பரோட்டா முருகேசன். மகன் விஜயன் தியாவும் உயிர் பிழைத்து விடுகிறார்.
வேண்டிக்கொண்டபடி ஒண்டி முனிக்கு கிடாவை பலி கொடுக்க நினைக்கிறார். ஆனால் ஊர் செல்வந்தர்கள் இரண்டு பேர் இதற்கு தடையாக இருக்கிறார்கள். ஆண்டுகளும் கடந்து ஓடுகிறது. பரோட்டா முருகேசனின் மகன் விஜயன் தியாவும் வளர்ந்து பொறுப்பின்றி இருந்து வருகிறார். இந்நிலையில் ஒண்டிமுனிக்கு பலி கொடுக்க இருந்த கிடா காணாமல் போகிறது.
இறுதியில் காணாமல் போன கிடாவை பரோட்டா முருகேசன் கண்டுபிடித்தாரா? ஒண்டிமுனிக்கு கிடாவை பலி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
பரோட்டா முருகேசனின் இயல்பான நடிப்பு படத்திற்கு பலம். காடு மேடுகளில் செருப்பு இல்லாமல் நடந்து செல்வது, குடும்பத்துக்காக அவர் படும் கஷ்டங்கள், கிடா விருந்து வைப்பதற்கு அவர் அனுபவிக்கும் சிரமங்கள் என உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
மகனாக வரும் விஜயன் தியா பொறுப்பற்ற கிராமத்து இளைஞனாக நடித்து, பின்னர் தந்தையின் நிலையை அறிந்து வாழ தொடங்குவது என காட்சிகளில் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாநாயகியாக வரும் வித்யா சக்திவேல் கிராமத்து காதலை கண்முன் நிறுத்தியுள்ளார். பரோட்டா முருகேசன் மகளாக வரும் சித்ரா நாகராஜனின் எதார்த்த நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
இயக்கம்
கிராமத்தில் நடந்த ஒரு உண்மை கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுகவனம். மனிதர்களின் வாழ்வியலை யதார்த்தத்தோடும் இயல்பாகவும் வெளிக் கொண்டு வந்துள்ள இயக்குனர் சுக வனத்துக்கு பெரிய பாராட்டுக்கள்.
இசை
நடராஜன் சங்கரனின் பின்னணி இசை கதை கேற்றவாறு பயணித்துள்ளது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜேடி விமல், கிராமத்தின் அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறார்.