செய்திகள்

ஆரணி அருகே குடிநீர் வழங்கக்கோரி பஸ்சை சிறைபிடித்து பெண்கள் மறியல்

Published On 2018-09-24 11:46 GMT   |   Update On 2018-09-24 11:46 GMT
ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி:

ஆரணி அருகே உள்ள முனுகப்பட்டு கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு போர்வெல் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படவில்லை. இதனால் ஒரு குடம் தண்ணீருக்காக அருகில் உள்ள கிராமங்களை நாடி செல்ல வேண்டிய அவல நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, செய்யாறு ஒன்றிய அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்து வலியுறுத்தினர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆரணி-வாழப்பந்தல் சாலையில் இன்று காலை காலி குடங்களுடன் திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக அரசு டவுன் பஸ்சையும் சிறைபிடித்தனர். அலுவலக நேரம் என்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பெரணமல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மறியலை கைவிட மறுத்த பெண்கள், போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Tags:    

Similar News