செய்திகள்

மேலூர் அருகே அரசு பஸ் மரத்தில் மோதி டிரைவர்-கண்டக்டர் உள்பட 12 பேர் படுகாயம்

Published On 2018-09-19 15:58 GMT   |   Update On 2018-09-19 15:58 GMT
அரசு பஸ் மரத்தில் மோதிய விபத்தில் டிரைவர்-கண்டக்டர் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

மேலூர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் இன்று அதிகாலை சிவகாசி நோக்கி புறப்பட்டது. காரைக்குடியை சேர்ந்த ஜெய்சன் சாமுவேல் பஸ்சை ஓட்டிவந்தார். பாலசுப்பிரமணியன் கண்டக்டராக இருந்தார்.

காலை 7 மணிக்கு மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள புறாக்கூடு என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பார்சல் லாரி பஸ் மீது மோதுவது போல் வந்தது. அரசு பஸ் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை லேசாக திருப்பினர். எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலை தடுமாறி சாலையோர புளியமரம் மீது மோதியது.

மோதிய வேகத்தில் பஸ்சின் பெரும்பகுதி சேத மடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் ஜெய்சன் சாமுவேல், கண்டக்டர் பால சுப்பிரமணியன், பயணிகள் மனோஜ்குமார் (வயது 27), சுகந்தி (37), கார்த்திக்குமார் (32) உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து நடந்த உடனே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஜெய்சன் சாமுவேல், பால சுப்பிரமணியன் உள்பட சிலரின் நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன், தனிப்பிரிவு ஏட்டு பரசுராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News