செய்திகள்

கியாஸ் சிலிண்டர் கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதி - இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம்

Published On 2018-09-19 10:30 GMT   |   Update On 2018-09-19 10:30 GMT
கியாஸ் சிலிண்டர் கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. #Gas #IndianOilCompany

சென்னை:

சமையல் கியாஸ் விற்பனையில் மத்திய அரசின் 3 எண்ணை நிறுவனங்கள் ஈடுபட்டு இருந்தாலும் இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி) தான் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் மட்டும் 40 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் சுமார் 40 ஆயிரம் சமையல் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்யும் போது அவர்கள் அதற்கான கட்டணத்தை பணமாக செலுத்தும் நிலை தற்போது உள்ளது. இதனால் சில்லறை பிரச்சினை ஏற்படுகிறது.

மேலும் கூடுதல் பணம் தந்தால் தான் சிலிண்டரை வினியோகம் செய்வோம் என்று கியாஸ் ஏஜென்சி ஊழியர்கள் பல இடங்களில் தகராறு செய்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் வீடுகளில் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது ஒரு சிலிண்டருக்கு ரூ.50 கூடுதலாக கட்டாயம் தர வேண்டும் என்று அடாவடித் தனம் செய்கின்ற நிலை உள்ளது.

சிலிண்டர் விலைக்கான தொகையை கொடுத்தால் ஏற்பதில்லை. இது போன்ற பிரச்சினைகளை தடுக்க பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பேடிஎம், போன்ற மின்னணு அட்டைகளை பயன்படுத்தி இ.வேலட் முறையில் சிலிண்டருக்கான கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான பயிற்சி சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் சிலிண்டரை வாங்கும் போது ஏற்படும் சில்லரை பிரச்சினை, அதிக தொகை வசூலிப்பது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஐ.ஓ.சி அதிகாரிகள் தெரிவித்தனர்.#Gas #IndianOilCompany

Tags:    

Similar News