செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-18 17:05 GMT   |   Update On 2018-09-18 17:05 GMT
தளிக்கோட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த தளிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் மனு அளிக்க திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு தளிக்கோட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலி குடங்களுடன் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில்கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த தளிக்கோட்டை ஊராட்சியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக

நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. இதுகுறித்து நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் குடிக்க தண்ணீர் இன்றி கிராம மக்கள் சிரமப்பட்டு வருகிறோம். தினசரி எங்கள் ஊரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று வடசேரி என்ற பகுதியில் இருந்து குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கும் செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஆழ்குழாயை சீரமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக தண்ணீர் பிரச்சினைக்காக மனு அளிக்க வந்த பெண்கள் சரக்கு வேனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது விதிமுறைகளை மீறி சரக்கு வேனில் மக்களை ஏற்றி வந்ததால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 2 சரக்கு வேன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.


Tags:    

Similar News