செய்திகள்

18 ஆண்டுகளாக நடந்து வரும் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 25-ந்தேதி தீர்ப்பு

Published On 2018-09-18 05:28 GMT   |   Update On 2018-09-18 05:28 GMT
கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கின் தீர்ப்பு வரும் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Rajkumar #Veerappan
கோபி:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 30-07-2000ம் ஆண்டு ஈரோடு மாவட்ட வனப்பகுதி கர்நாடக மாநில எல்லையான தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.

108 நாட்கள் பிணைக்கைதியாக நடிகர் ராஜ்குமாரை வைத்திருந்த வீரப்பன் பின்னர் ராஜ்குமாரை விடுவித்தான்.

இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தனர்.



இந்த வழக்கில் தற்போது மாயாவி வீரப்பன், நடிகர் ராஜ்குமார் இறந்து விட்டனர் எனினும் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த வழக்கு கடந்த 18 வருடம் 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை 10 நீதிபதிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரில் கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன் ஆகிய 5 பேர் நீதிபதி மணி முன்பு ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 25-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். பின்னர். அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றார். மேலும், அன்றைய தினம் வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரும் தவறாமல் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் 47 பேர் சாட்சி அளித்துள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #Rajkumar #Veerappan

Tags:    

Similar News