செய்திகள்

விவசாயிகளுக்கு குறுகியகால பயிர்க் கடனை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்

Published On 2018-09-17 16:50 GMT   |   Update On 2018-09-17 16:50 GMT
விவசாயிகளுக்கு குறுகியகால பயிர்க்கடனை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளையின் பேரவை கூட்டம் எளம்பலூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவரும், மண்டல இணைச்செயலாளருமான கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். டெல்டா மண்டலத்தின் செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் அன்பழகன் உறுதிமொழி வாசித்தார். மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி நிதிநிலை குறித்தும், இணைச்செயலாளர் திருமுருகன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை வாசித்தனர். மாநில நிர்வாகிகளான பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன், பொருளாளர் சேகர், துணைத்தலைவர்கள் சங்கரன், துரைக்கண்ணு ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

கூட்டத்தில், விவசாய கடன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் எவ்வித ஆவணமும் கேட்காமல் ரூ.2 லட்சம் வரை விவசாய நகைக்கடன் வழங்க அனுமதிக்க வேண்டும். விவசாய கடன்களுக்கு உரம் வழங்கிட மத்திய கூட்டுறவு வங்கிகளால் கட்டாயப்படுத்துதல் கைவிடப்பட வேண்டும். சொசைட்டி உறுப்பினர்களுக்கு குறுகியகால பயிர்க்கடன் அடமானம் பெறாமல் தனிநபர் ஜாமீன் பேரில் ரூ.1 லட்சம் வரை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதனை ரூ.2 லட்சமாகவும், தொடர் அடமானத்தின் பேரில் வழங்கப்படும் கடன் தொகையை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க மாநில அரசு அனுமதிக்க வேண்டும். உர விற்பனையை ஆரம்ப கால நடைமுறைப்படி வினியோகம் செய்திட அனுமதிக்க வேண்டும் அல்லது உர விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ஏற்படுகிற காலி பணியிடங்களால் பல சங்கங்கள் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆகவே சங்கங்களில் ஏற்படும் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பிட ஏதுவாக சங்க தலைவருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். நகை கடனுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வட்டி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மாநில அரசு தீவிரமாக பரிசீலனைக்கு ஏற்று உரிய நடவடிக்கை எடுத்து கூட்டுறவு கடன் சங்கங்களை பாதுகாக்க வேண்டும் இந்த விஷயத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று (திங்கட்கிழமை) கடன் வழங்கும் பணியை பெரம்பலூர் மாவட்டத்தில் முற்றிலும் புறக்கணிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைத்தலைவர் பழனிசாமி நன்றி கூறினார். 
Tags:    

Similar News