செய்திகள்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை புதிதாக ஆய்வு நடத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு

Published On 2018-09-16 06:16 GMT   |   Update On 2018-09-16 06:16 GMT
சென்னை-சேலம் 8 வழிச்சாலை புதிதாக ஆய்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.#GreenExpressway #HC

சென்னை:

சென்னையில் இருந்து சேலத்துக்கு ஆத்தூர், உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு பாதையும், வேலூர், கிருஷ்ணகிரி வழியாக ஒரு பாதையும் ஏற்கனவே உள்ளன.

இருபாதைகளுமே மிகவும் சுற்றி செல்பவையாக இருக்கின்றன. எனவே, 3-வது பாதையாக சென்னையில் இருந்து போளூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, அரூர் வழியாக கல்வராயன் மலையை கடந்து புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

277 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையை 8 வழி பாதையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க ஏற்பாடுகள் செய்தது.

சாலைக்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. சாலை மொத்தம் 5 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்துவதற்காக அளவீடு பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

ஆனால், இதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுற்றுச்சூழல்கள், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறி பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு போர்க்கொடி உயர்த்தின.

திட்டத்தை எதிர்த்து 12 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறை ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பாதிப்புகளை குறைத்து பணிகளை செய்வதற்கு உத்தரவிட்டது.

இதன் காரணமாக சாலை பணிகளில் பல மாற்றங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை உருவாக்கியது.


ஏற்கனவே வனப்பகுதி அல்லாத இடங்களில் 90 மீட்டர் அகலத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அது, 70 மீட்டராக குறைக்கப்பட்டது. வனப்பகுதியில் 50 மீட்டராக குறைக்கப்பட்டது.

மேலும் வனப்பகுதியில் 13¼ கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அது, 9 கி.மீட்டராக குறைக்கப்பட்டது. இத்துடன் வனப்பகுதியில் 120 ஹெக்டேர் நிலம் சாலைக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அது, 45 ஹெக்டேராக குறைக்கப்பட்டது.

ஆனாலும் கூட, இந்த சாலை திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணைகளிலும் நீதிபதிகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த வண்ணம் உள்ளனர்.

இதையடுத்து மத்திய சுற்றுச்சூழல் துறையின் மதிப்பீட்டு நிபுணர்கள் குழு இது சம்பந்தமாக மீண்டும் ஆய்வு செய்தது. இதற்கான கூட்டம் கடந்த 30, 31-ந் தேதிகளில் நடந்தன.

அப்போது இந்த சாலை பணிகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதில், பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளனர்.

அதன்படி சாலை அமைப்பது தொடர்பாக புதிதாக 2 விதமான ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மத்திய சுற்றுச் சூழல்துறை மதிப்பீட்டு நிபுணர் குழு உத்தரவிட்டுள்ளது.

மலைப்பகுதியில் சுற்றுச் சூழல் முறைகள் பாதிக்காமல் இருக்கவும், சமூக பொருளாதார நிலைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், அதற்கு தகுந்த மாதிரி இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசின் பொருத்தமான நிறுவனங்கள் மூலம் இந்த ஆய்வுகளை செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆய்வுகளை செய்யக்கூடிய தகுதி உள்ள அரசு நிறுவனங்களாக தேசிய சுற்றுச்சூழல் அரசு ஆராய்ச்சி மையம், ஜி.பி. பந்த் தேசிய இமாலயன் சுற்றுச்சூழல் வளர்ச்சி நிறுவனம் ஆகியவை உள்ளன.

இந்த நிறுவனங்களில் ஏதாவது ஒன்றிடம் இந்த பணிகளை ஒப்படைக்கலாம் என்றும் அந்த குழு யோசனை தெரிவித்துள்ளது.

இதுபற்றி முழுமையாக ஆய்வு செய்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழுவுக்கு அறிக்கை தர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக இன்னும் 2 வகையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, 8 வழிச்சாலை திட்டத்தில் இன்னும் பல மாறுதல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக சாலை அமைக்கும் பணி நடப்பதற்கு மிகவும் கால தாமதம் ஆகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

புதிய ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டாலும் ஏற்கனவே கோர்ட்டில் வழக்குகள் உள்ள தால் அதன் தீர்ப்புக்கோ அல்லது நடுவர்மன்ற தீர்ப்புகளுக்கோ கட்டுப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது. #GreenExpressway #HC

Tags:    

Similar News