செய்திகள்

புதுவை மக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்- நாராயணசாமி வேண்டுகோள்

Published On 2018-09-15 10:43 GMT   |   Update On 2018-09-15 10:43 GMT
புதுவை மக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே உள்ள பகுதியில் கடற்கரையை தூய்மை செய்யும் பணி தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கடலோர காவல் படை வீரர்கள், ஊர்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

பின்னர் புதுவை மாநிலத்தை தூய்மையாக வைப்போம் என பதாகையில் எழுதி முதல் அமைச்சர் நாராயணசாமி கையெழுத்திட்டார்.

பின்னர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடல் வளத்தை பேணி காப்பது நமது கடமை. நகரப் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர். அதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அதிகளவில் சுற்றுலா தளங்களில் போட்டு செல்கின்றனர். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. புதுவை மக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
Tags:    

Similar News