செய்திகள்
விழுப்புரம் பஸ் நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடுதலாக பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து விழுப்புரம் பஸ் நிலையத்தில் பயணிகள் போராட்டம்

Published On 2018-09-14 09:35 GMT   |   Update On 2018-09-14 09:35 GMT
சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படாததை கண்டித்து விழுப்புரம் பஸ் நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட ஏராளமானோர் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர்.

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி விட்டு மீண்டும் சென்னைக்கு செல்வதற்காக விழுப்புரம், வளவனூர், விக்கிரவாண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் விழுப்புரம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணி முதலே குவிந்தனர். நேரம் செல்ல செல்ல சென்னைக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் நீண்ட நேரமாகியும் சென்னைக்கு செல்லும் பஸ்கள் வரவில்லை. தென்மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக சென்னைக்கு சென்றன. பஸ் நிலையத்துக்குள் வரவில்லை.

விழுப்புரத்தில் இருந்தும் சென்னைக்கு குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் பஸ்சில் இடம் கிடைக்காமல் அவதியடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகம் முன்பு திரண்டனர். கூடுதலாக பஸ்களை இயக்ககோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

பின்னர் பஸ் வெளியே செல்லும் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மற்ற பகுதிகளுக்கு செல்ல கூடிய பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை. தகவல் அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதலாக பஸ்கள் இயக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதை ஏற்றுகொண்ட பயணிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் விழுப்புரம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Tags:    

Similar News