செய்திகள்

கோணங்கிப்பட்டியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

Published On 2018-09-11 17:11 GMT   |   Update On 2018-09-11 17:11 GMT
கோணங்கிப்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சீரான குடிநீர் வழங்கக்கோரி நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிகடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 217 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர், கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் எருமப்பட்டி அருகே உள்ள கோணங்கிப்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

கோணங்கிப்பட்டி ஆதி திராவிடர் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது குடும்ப அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க எடுத்து வந்து உள்ளோம். இனியாவது எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். 
Tags:    

Similar News