செய்திகள்

வாகன சோதனையில் அடித்ததால் தற்கொலை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம்?

Published On 2018-09-08 10:30 GMT   |   Update On 2018-09-08 10:30 GMT
ஈரோடு அருகே வாகன சோதனையின் போது போலீஸ் அடித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு அடுத்த பெரிய அக்கரகாரம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் அருண் குமார் (வயது 18).அருண்குமார் ஈரோட்டில் உள்ள ஜவுளி கடைகளில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

அருண்குமார் கடந்த 5-ந் தேதி மாலை கனி ராவுத்தர் குளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அருண்குமார் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் நிற்காமல் சென்று விட்டார். இதையடுத்து மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து அருண்குமாரின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அன்று இரவு அவரது வீட்டுக்கு கருங்கல்பாளையம் போலீசார் ஒருவர் சென்று விசாரணைக்கு வருமாறு அழைத்தார்.

அதன்பேரில் அருண்குமார் தனது பெற்றோருடன் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் அருண்குமாரை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்த அருண்குமார் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று அருண்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு அருண் குமாரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அருண்குமாரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பிரப்ரோடு வழியாக ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு நடந்து சென்று எஸ்.பி.சக்தி கணேசிடம் மனு கொடுத்தனர்.

எஸ்.பி.சக்தி கணேசன் அவர்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.இதனை அடுத்து அருண்குமார் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஈரோடு ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறியதாவது.-

அருண்குமார் உறவினர்கள் என்னை சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் இன்னும் ஆயுதப்படைக்கு மாற்றப்படவில்லை. விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News