செய்திகள்

ஜெ. மரண விசாரணை - சிசிடிவி காட்சிகளை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க அப்போலோவுக்கு உத்தரவு

Published On 2018-09-07 10:02 GMT   |   Update On 2018-09-07 10:02 GMT
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறந்த வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை நிவர்த்தி செய்ய தமிழக அரசால் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடுதான் என அறிக்கை வெளியிட காரணம் என்ன? என அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.



மேலும், பல உறுப்புகளில் பிரச்சனைகளுடன் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, அவர் நினைக்கையில் வீடு திரும்புவார் என கூறியது ஏன் என்றும், வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என வெளியிட்ட அறிக்கைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும் எனவும் அப்போலோ மருத்துவமனைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறந்த வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
Tags:    

Similar News