செய்திகள்

ரஜினி மக்கள் மன்றத்தினர் பேனர் வைக்க புதிய கட்டுப்பாடு

Published On 2018-09-06 03:24 GMT   |   Update On 2018-09-06 03:24 GMT
நோட்டீஸ், பேனர்களை அச்சிடும்போது தலைமைக்கு அனுப்பி அனுமதி எண் பெற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. #RajiniMakkalMandram
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்னோட்டமாக தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். அதற்காக நேர்காணல் நடத்தி புதிய நிர்வாகிகளையும் அவர் நியமித்தார். தற்போது அரசியல் கட்சிகளை போன்று ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய விதிகளை உருவாக்கி கடந்த மாதம் புத்தகம் ஒன்றையும் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

அதில், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது வாகனங்களில் மன்றத்தின் கொடியை நிரந்தரமாக பொருத்தக்கூடாது. அந்த கொடி துணியால் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும். மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும்போது உறுப்பினர்கள் கொடியை வாகனங்களில் பயன்படுத்தலாம். நிகழ்ச்சி முடிந்த பின்னர் வாகனங்களில் இருந்து கொடியை அகற்றிவிடவேண்டும். பெண்கள், முதியோர்களிடம் மிகவும் கண்ணியத்துடன் நடக்கவேண்டும்.

சாதி, மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ, அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் சேருவதற்கு அனுமதி இல்லை. மன்ற பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்வது, நியமனம் செய்வது, நீக்கம் செய்வது உள்ளிட்ட விஷயங்களில் தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.



இந்தநிலையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நோட்டீசுகள் ஒட்டுவதிலும், பேனர்கள் வைப்பதிலும் என மேலும் சில கட்டுப்பாடுகளை ரஜினி மக்கள் மன்றம் உத்தரவாக பிறப்பித்து இருக்கிறது.

அதன்படி, நோட்டீஸ், பேனர்கள் அச்சிடுவதற்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமைக்கு அனுப்பி, உரிய அனுமதி எண் பெறவேண்டும். அனுமதி எண் பெற்ற பின்னரே வைக்கவேண்டும்.

மாநகரத்துக்கு உட்பட்ட மண்டல நிகழ்ச்சியில் மாநகர செயலாளரை விட மண்டல நிர்வாகிகள் படம் இடம்பெறலாம் என்று ரஜினிகாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. #RajiniMakkalMandram

Tags:    

Similar News