செய்திகள்

சிறுபான்மையினருக்கு புதுவை அரசு துரோகம் இழைத்து வருகிறது - அன்பழகன்

Published On 2018-09-05 11:52 GMT   |   Update On 2018-09-05 11:52 GMT
நிதியுதவி மூலம் பள்ளிகள் நடத்திவரும் சிறுபான்மையினருக்கு புதுவை அரசு திட்டமிட்டு துரோகம் இழைத்து வருவதாக அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். புதுவை மாநில அரசு ஆசிரியர் தினத்தை கொண்டாடும் தகுதியை இழந்துள்ளது.

புதுவை அரசு பட்ஜெட்டில் சுமார் ரூ.600 கோடிக்கு மேல் கல்விக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளின் தரம் உயரவில்லை. 10 ஆண்டுக்கு முன்பு ஒரு லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் படித்தனர்.

படிப்படியாக இது குறைந்து தற்போது 74 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் படிக்கும் நிலையில் உள்ளது. இதற்கு அரசு பள்ளியின் கல்வித்தரம், உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை தீர்க்காததுதான் காரணம்.

மாணவர்களுக்கு பள்ளி திறந்து 3 மாதமாகியும் இதுவரை சீருடைகூட வழங்கப்படவில்லை. சைக்கிள், குடை, மழைக் கோட், உதவித்தொகை என எதையும் அரசு வழங்கவில்லை.

அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆசிரியர் தினத்தை புறக்கணித்து கறுப்பு தினமாக அறிவித்துள்ளனர். போராட்டத்தை அவர்கள் மீது அரசு திணித்துள்ளது. 6 மாதமாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. 7-வது சம்பள கமி‌ஷனை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அமல்படுத்தியும், நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அமல்படுத்தவில்லை.

சிறுபான்மையினர்தான் நிதியுதவி பெறும் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். அரசு திட்டமிட்டு சிறுபான்மையினருக்கு துரோகம் செய்கிறது. கவர்னரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமீபத்தில் வெளி நாட்டில் படிக்கும் மாணவி விமானத்தில் வரும்போது தமிழிசை சவுந்தரராஜனையும், அவர் சார்ந்த கட்சியையும் விமர்சித்தார். மலிவு விளம்பரம் தேடும் நோக்கத்தில் அந்த மாணவி செயல்பட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

எந்த அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் அவரின் முகத்திற்கு எதிரே அவரைப்பற்றியோ, அவர் கட்சியை பற்றியோ விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதே ஸ்டாலின் ரெயிலில் தன்னுடன் பயணம் செய்தவர் செல்பி எடுத்தபோது கன்னத்தில் அறைந்தார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும் டுவிட்டரில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலின் போது அரியாங்குப்பத்தில் விமர்சித்தார் என்பதற்காக வேட்டியை மடித்து கொண்டு இறங்கி சென்றவர் நாராயணசாமி. தனக்கென்றால் ஒன்று, பிற கட்சிகளுக்கு என்றால் ஒன்று என இவர்கள் பேசி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News