செய்திகள்

ஜோலார்பேட்டையில் விடுதி மாணவர்களிடம் பணம் வசூலித்த வார்டன் சஸ்பெண்டு

Published On 2018-09-05 11:16 GMT   |   Update On 2018-09-05 11:16 GMT
ஜோலார்பேட்டையில் விடுதியில் மாணவர்களிடம் இருந்து நன்கொடையாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வசூலித்த வார்டனை சஸ்பெண்ட் செய்து உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகில் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி உள்ளது. இதில் ஜவ்வாதுமலை, புதூர் நாடு, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து 35 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியின் வார்டனாக ஜோலார்பேட்டையை சேர்ந்த பாஸ்கரன் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் விடுதியில் சுகாதாரமில்லாத உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதோடு அடிப்படை வசதிகள் இல்லாததால் நோய் தொற்று அபாயம் இருப்பதாக திருப்பத்தூர் உதவி கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவர்கள் மின் விசிறி, மின் விளக்கு இல்லாமல் இருளில் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. சமையல் அறைக்கு சென்று ஆய்வு செய்தபோது காலையில் சமைத்த உணவையே இரவுக்கும் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று உதவி கலெக்டர் தலைமையில் நகராட்சி கமி‌ஷனர் விசாலாட்சி, ஆதிதிராவிட நல (தனி) தாசில்தார் குமரேசன் ஆகியோர் வார்டனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவும், அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது. மேலும் திருமண நாட்களில் விடுதியில் உணவு சமைக்கப்படாமல் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து உணவை எடுத்து வந்து மாணவர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது.

மேலும் விடுதி வார்டன் பாஸ்கரன் மாணவர்களிடம் இருந்து இதுவரை நன்கொடையாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை வசூலித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து உதவி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News