செய்திகள்
பெள்ளாதி கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு திரண்ட பொதுமக்கள்

ரூ.2 கோடி முறைகேடு செய்ததாக புகார்- கூட்டுறவு சங்க செயலாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2018-09-05 10:06 GMT   |   Update On 2018-09-05 10:06 GMT
காரமடை அருகே ரூ.2 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து கூட்டுறவு சங்க செயலாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
காரமடை:

காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

இச்சங்கத்தில் 2 ஆயிரத்தி 148 உறுப்பினர்களாக உள்ளனர். சங்க செயலாளராக மனோகரன் என்பவர் உள்ளார். சங்கத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரூ.2 கோடிக்கு மேலாக டெபாசிட் செய்து உள்ளனர்.

இதில் மனோகரன் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கோவை மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் மனோகரன் கூட்டுறவு சங்கத்துக்கு வராமல் இருந்துள்ளார்.

அவர் நேற்று முன்தினம் அலுவலகம் வந்ததை அறிந்த பொதுமக்கள் அலுவலகத்துதில் திரண்டனர். அவர்கள் மனோகரனை முற்றுகையிட்டு தங்களது பணத்தை திருப்பித்தரக் கேட்டனர். இதனால் மனோகரன் காரில் ஏறி தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் தெரிந்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முறைகேடு தொடர்பாக புகார் கொடுத்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.

இதற்கிடையே சங்க உறுப்பினர்களும் அங்கு வந்தனர். உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து பொதுமக்களின் வைப்புத் தொகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News