செய்திகள்

வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் தகவல்

Published On 2018-09-04 15:08 GMT   |   Update On 2018-09-04 15:08 GMT
விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை:

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

வேளாண் பொறியியல் துறையின் மூலம் வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ், நடப்பு 2018-19-ம் நிதி ஆண்டில் மானிய விலையில் வேளாண்மை எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் அதிக சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டிரில்லர், நெல்நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, கதிர் அறுக்கும் எந்திரம், சுழல் கலப்பை, விசை களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசை தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் முதலான வேளாண் எந்திரங்களையும், கருவிகளையும் விவசாயிகள் மானிய உதவியுடன் வாங்கலாம்.

இதற்கு மத்திய அரசின் வேளாண் எந்திரமயமாக்கும் துணை இயக்க வழிகாட்டி நெறிமுறைகளின்படி மானியம் வழங்கப்படும். சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவோ? அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது. உயர் தொழில்நுட்ப, அதிக விலை உள்ள எந்திரங்களை வாங்கிட அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற விவசாயிகள் உழவன் செயலியில் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான agrimachinery.nic.in&™ இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளையும் மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சு வார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணைய தளத்திலேயே கணக்கிடப்படும்.

விவசாயிகள் முகவரை ஒருமுறை தேர்வு செய்தபின், வேறு முகவரை தேர்வு செய்ய இயலாது. ஒரு நிதியாண்டில் தனக்கு தேவைப்படும் எதாவது 2 வேளாண் எந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அதே வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்க இயலும். வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலர் ஆகியோருடன் கூடிய புகைப்படத்தினை இணைய தளத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் ஆய்வு அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர் இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News