செய்திகள்
சந்தியா

அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயித்த பெண் மணப்பாறையில் பதுங்கல்- தனிப்படை விரைந்தது

Published On 2018-09-04 04:51 GMT   |   Update On 2018-09-04 10:22 GMT
பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்டு, காணாமல் போன புதுப்பெண் மணப்பாறையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். #EswaranMLA
கோபி:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன் (வயது 43).

இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23) என்ற எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் வருகிற 12-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்தது. உறவினர்களுக்கு பத்திரிகை கொடுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காமல் சந்தியா வீட்டை விட்டு வெளியேறி அக்காள் வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் மாயமாகி விட்டார்.

திருமணம் செய்ய இருந்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ-சந்தியா ஜோடியாக எடுத்த படம்.

மணப்பெண் திடீரென மாயமானதால் இருவர் வீட்டிலும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. இது குறித்து மணப்பெண்ணின் தாய் தங்கமணி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரில் தனது மகளுக்கும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்துப்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவருடன் பழக்கம் இருந்ததாகவும் மகளை மீட்டு தரும்படியும் கூறி இருந்தார். இதையொட்டி கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மணமகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மணமகள் சந்தியாவின் செல்போன் எண்ணை வைத்து செல்போன் டவர் மூலம் விசாரித்தபோது திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருப்பதாக காட்டியது.

இதனால் சந்தியா தனது ஆண் நண்பர் விக்னேசுடன் மணப்பாறையில் தங்கி இருப்பது தெரியவந்தது. எனவே கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் தனிப்படை போலீசார் மணப்பாறைக்கு விரைந்துள்ளனர். #EswaranMLA
Tags:    

Similar News