செய்திகள்

வேலூர் ஜெயிலில் கைதிகளிடம் கஞ்சா பறிமுதல்

Published On 2018-09-01 09:55 GMT   |   Update On 2018-09-01 09:55 GMT
வேலூர் ஜெயிலில் கைதிகளிடம் கஞ்சா பறிமுதல் கைப்பற்றப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைதிகளுக்கு எளிதில் கிடைக்கிறது.

கைதிகளை பார்க்கவரும் பார்வையாளர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை உணவு பொருட்களில் மறைத்து கொடுத்து விட்டு செல்கின்றனர்.

இதற்கு சில போலீசாரும் உடந்தையாக இருக்கின்றனர். சமீபத்தில் வேலூர் பெண்கள் ஜெயிலில் சோதனை நடத்தியபோது கத்தியை போலீசார் கைப்பற்றினர்.

இந்த நிலையில், ஆயுதப்படை டி.எஸ்.பி. விநாயகம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை ஆண்கள் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அறை எண் 6-ல் உள்ள கைதிகளிடம் இருந்து 5 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து, ஒட்டு மொத்த அறைகளில் உள்ள கைதிகளிடமும், ஜெயில் வளாகத்திற்குள்ளும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

கஞ்சா கைப்பற்றப்பட்டது தொடர்பாக, பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News