செய்திகள்

மங்கலம்பேட்டை அருகே கருவேல மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம கும்பல்

Published On 2018-08-27 16:12 IST   |   Update On 2018-08-27 16:12:00 IST
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே கருவேல மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம கும்பல் பொதுமக்களை கண்டதும் தப்பி ஓடி விட்டனர்.
மங்கலம்பேட்டை:

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே மாத்தூர் ஊராட்சியில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான அரிவேரி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில், பல ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பெரிய, பெரிய அளவிலான கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளது.

இந்த மரங்களை மர்ம கும்பலை சேர்ந்த சிலர் வெட்டி கடத்த முயன்றனர். இந்த தகவல் கிராம மக்களிடையே பரவியது. இதனையடுத்து, சுமார் 70-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு, சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த மர்ம கும்பலை சுற்றி வளைக்க முற்பட்டனர்.

ஆனால், கிராம மக்கள் திரண்டு வருவதை அறிந்த அந்த மர்ம கும்பல், பொதுமக்களிடம் பிடிபடாமல் லாவகமாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து, மாத்தூர் கிராம மக்கள், மங்கலம் பேட்டை போலீசாருக்கும், விருத்தாசலம் பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேசனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மங்கலம் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், காமராஜ் மற்றும் விருத்தாசலம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மர்ம கும்பல் மரம் வெட்ட பயன்படுத்திய 2 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 4 மரம் வெட்டும் மோட்டார் மெஷின் உள்ளிட்ட கருவிகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News