செய்திகள்

அந்தியூர் அருகே மலைப்பாதையில் அரசு பஸ்சை வழிமறித்த ஒற்றையானை

Published On 2018-08-25 17:40 IST   |   Update On 2018-08-25 17:40:00 IST
அந்தியூர் அருகே மலைப்பாதையில் அரசு பஸ்சை வழிமறித்த ஒற்றையானையால் பயணிகள் அச்சமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை வழியாக பர்கூர் கிழக்கு மலைப்பாதையில் கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் சாலை உள்ளது.

இன்று காலை காலை 5.30 மணி இந்த வழியாக அந்தியூரில் இருந்து தேவர்மலை, மடம் ஆகிய ஊர்களுக்கு செல்லம் அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சின் டிரைவராக திருநாவுக்கரசு, கண்டக்டராக குணசேகரன் ஆகியோர் இருந்தனர். பஸ்சில் 10 பயணிகள் இருந்தனர்.

மலைப் பாதையின் முதல் வளைவில் சென்றபோது அங்கு ஒற்றை யானை ஒன்று நின்றது.

நடுரோட்டில் அந்த யானை நின்றதால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை சற்று தூரத்தில் நிறுத்தினார். ஆனால் யானை அங்கிருந்து செல்வதாக இல்லை.

வெகுநேரமாக நடுரோட்டில் அந்த யானை வாலை ஆட்டிக்கொண்டே நின்றது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அரசு பஸ்சுக்கு பின்னால் பால் வாகனம், டிராவல்ஸ் வாகனம் உள்பட 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

காலை 6.45 மணி வரை வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகளும், மற்ற வாகனங்களில் இருந்தவர்களும் யானை வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

ஆனால் ஒரு வழியாக 6.45 மணி அளவில் அந்த யானை தானாகவே நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டு சென்றன. பஸ் பயணிகளும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர். 

Tags:    

Similar News