செய்திகள்

போலீசாருடன் மோதல்: கைதான மாணவி வளர்மதி ஜெயிலில் உண்ணாவிரதம்

Published On 2018-08-25 14:33 IST   |   Update On 2018-08-25 14:33:00 IST
போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு கைதான மாணவி வளர்மதி புழலில் உள்ள பெண்கள் சிறையில் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். #valarmathi
செங்குன்றம்:

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டது.

இதற்காக, இந்த அமைப்பினர் நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே தாரை தப்பட்டை முழங்க பாட்டுபாடி உண்டியல் வசூல் செய்தனர் இதை உளவுப்பிரிவு போலீஸ் ஏட்டு ஸ்டாலின் செல்போனில் படம் பிடித்தார்.

இதற்கு உண்டியல் வசூலில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் அவர்தொடர்ந்து படம் பிடித்தார். இதனால் ஏற்பட்ட மோதலில் போலீஸ் ஏட்டு ஸ்டாலினுக்கு அடி- உதை விழுந்தது. இதையடுத்து, அவரது புகாரின் பேரில் உண்டியல் வசூல் நிகழ்ச்சியில் பங்கேற்பு பொதுநல மாணவர் இயக்கத்தின் செயலாளரான மாணவி வளர்மதி(23) மற்றும் இந்த இயக்கத்தை சேர்ந்த அருந்தமிழன், காளிமுத்து, சாஜன், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அடுத்த மாதம் 6-ந்தேதி வரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

மாணவி வளர்மதி புழலில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இவர், நடந்த சம்பவத்துக்கு காரணமான உளவுப்பிரிவு போலீஸ் ஏட்டு ஸ்டாலின் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். #valarmathi
Tags:    

Similar News