செய்திகள்

தருமபுரியில் கியாஸ் கசிவு ஏற்பட்டு ஓட்டலில் தீ விபத்து - 2 பெண் ஊழியர்கள் காயம்

Published On 2018-08-25 08:18 GMT   |   Update On 2018-08-25 08:18 GMT
தருமபுரியில் இன்று காலை ஓட்டலில் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரி குப்பாண்டியூர் தெருவைச் சேர்ந்தவர் அருண். இவர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகேயும், சாலை விநாயகர் ரோட்டிலும் தனியார் ஓட்டலை நடத்தி வருகின்றார்.

இதில் சாலை விநாயகர் ரோட்டில் இயங்கி வரும் ஓட்டலில் இன்று காலை வழக்கபோல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் திடீரென்று கியாஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. அந்த தீ சிறிது நேரத்தில் சமையலறை முழுவதும் பற்றி கொண்டது.

அப்போது ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் மற்றும் ஓட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து ஓடினர்.

அப்போது சமையலறையில் அங்கு நின்று கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் தலைதெறிக்க ஓடினர். இதில் ரஞ்சிதம்மாள் என்பவருக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டது. வள்ளியம்மாள் என்பவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்தார். உடனே ஓட்டலில் இருந்த மற்ற ஊழியர்கள் அவர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் ஓட்டல் அருகே திரண்டு வந்தனர்.

சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறையினருக்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு வந்து தீயணைக்க முயன்றனர். ஆனால் தீ அறை முழுவதும் எரிந்து கொண்டிருந்தால் அவர்களால் எந்த இடத்தில் தீ எரிவது என்று கண்டுபிடிக்க முடியாமல் போனது. சிறிது நேரம் கழித்து கியாஸ் கசிவு ஏற்பட்ட இடத்தை கண்டுபிடித்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தபகுதி முழுவதும் சிறிது பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தீவிபத்தில் ஓட்டலில் பணிபுரிந்த தீக்காயம் ஏற்பட்ட ரஞ்சிதம்மாளையும், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட வள்ளியம்மாளையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News