செய்திகள்

சொந்தமான இடத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கவேண்டும்- கலெக்டரிடம் கீதாஜீவன் எம்எல்ஏ கோரிக்கை

Published On 2018-08-23 10:37 GMT   |   Update On 2018-08-23 10:37 GMT
தூத்துக்குடியில் உப்பு இலாகாவுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கவேண்டும் என்று கலெக்டரிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாநகரத்தில் மத்திய அரசின் உப்பு இலாகாவிற்கு உட்பட்ட ஊரணி ஒத்த வீடு, மினி சகாயபுரம் ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் மாநகராட்சி மூலம் குடிநீர் வசதியோ, தெருவிளக்கோ, சாலை வசதியோ கழிப்பிட வசதியோ செய்ய முடியாத நிலையில் அந்த ஏழை-எளிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதுபற்றி மத்திய உப்பு இலாகா அதிகாரியை நேரில் சந்தித்து மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்த போது, மாநில அரசுக்கு இடத்தை விலைக்கு வழங்க முடியும் என்பதை கூறினார். ஆகவே கலெக்டர் சிறப்புக் கவனம் செலுத்தி அரசின் மூலம் அந்த இடத்தைப் பெற்று, அதில் குடியிருந்து வரும் ஏழை-எளிய மக்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் வீரநாயக்கன்தட்டு மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்க முத்தையா புரத்துக்கு 5கி.மீ செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்தப் பகுதியில் 150 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். ஆகவே மாவட்ட கலெக்டர் அந்தப் பகுதியில் நகரும் கூட்டுறவு கடை மூலமோ அல்லது வாரம் 2 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் அந்தப் பகுதிக்கு சென்று விநியோகம் செய்யவோ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தூத்துக்குடி மாநகரத்தில் மணிநகர், அண்ணாநகர்-1, டூவிபுரம் பகுதிக்குட்பட்ட ரே‌ஷன் கடை போல்பேட்டை பகுதி மார்க்கெட்டிங் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் அதிக தூரம் சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே போல்பேட்டை மார்க்கெட்டிங் சொசைட்டியில் உள்ள கடையை டூவிபுரத்தில் உள்ள மகளிர்க்குழு வணிக வளாகத்தில் காலியாக உள்ள கடைகளில் மாற்றி அமைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News