செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ராம கோபாலன் கோரிக்கை

Published On 2018-08-23 04:11 GMT   |   Update On 2018-08-23 04:11 GMT
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ராம கோபாலன் கூறியுள்ளார். #vinayagarsathurthi
சென்னை:

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வீட்டிலும், கோவில்களிலும் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, வீதியில் வைத்து கொண்டாட வைத்து, மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டார் பாலகங்காதர திலகர்.

அதுபோல தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், இந்து சமுதாய ஒற்றுமைக்கும், எழுச்சிக்கும் முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விநாயகரை வைத்து திருவல்லிக்கேணியில் துவக்கிய விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது தமிழகம் முழுவதும், ஒரு லட்சத்திற்கு மேல் விநாயகர் வைத்து வழிபடும் மக்கள் விழாவாக நடைபெற்று வருகிறது.

சாதாரணமாக விழா குழு ஒன்றை அமைத்து நடைபெற்று வந்தது. தற்போது குழுவினர் மொத்தமும் காப்புக் கட்டி, அய்யப்பனுக்கு மாலை போடுவதுபோல விநாயகருக்குப் பிரார்த்தனை செய்து மாலை அணிந்து, விழா ஆரம்பிப்பதற்கு முன்னரே விரதத்தைத் தொடங்கி, விழா முடியும் வரை விரதம் இருக்கிறார்கள்.

வருடத்திற்கு ஒரு முறை, நாள் கணக்கில் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தியால் மக்களிடையே ஏற்படும் நல்ல மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, மராட்டியம் உள்பட பல மாநிலங்களில் அரசும், நீதிமன்றமும், காவல்துறையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதை நாம் பார்க்கிறோம்.

அதுபோல, இந்த ஆண்டு, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவிற்கு தமிழக அரசும், காவல்துறையும், அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #vinayagarsathurthi
Tags:    

Similar News