செய்திகள்

மேலூர் அருகே முதியவர் கொலை- 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2018-08-22 17:57 IST   |   Update On 2018-08-22 17:57:00 IST
மேலூர் அருகே தகராறில் முதியவரை கீழே தள்ளிவிட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கெங்கம்பட்டியை அடுத்துள்ள கரையிபட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவர் நேற்று அங்குள்ள கலையரங்கம் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த 3 வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் போதையில் மருதுபாண்டியனிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது மருதுபாண்டியனின் தாத்தா சின்னகருப்பன் (வயது 70) அங்கு வந்து சண்டையை விலக்கி வைத்து சமரசமாக செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அவரை கீழே தள்ளி பிரச்சினை செய்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமரசம் செய்தனர்.

கீழே விழுந்த சின்னகருப்பன் தலையில் ஊமைக்காயம் ஏற்பட்டது. இதை அறியாத அவர் வீட்டுக்குச் சென்று தூங்கினார்.

இந்த நிலையில் இன்று காலை சின்ன கருப்பன் பிணமாக கிடந்தார். 3 வாலிபர்கள் கீழே தள்ளியதில் அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து மருதுபாண்டியன் கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராதிகா, தனிப்பிரிவு ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News