செய்திகள்

ஒளிரும் ஈரோடு சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் குளம் தூர்வாரும் பணி

Published On 2018-08-22 17:29 IST   |   Update On 2018-08-22 17:29:00 IST
ஒளிரும் ஈரோடு சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளங்களை தூர்வார பணி துவங்கப்பட்டது.
ஈரோடு:

ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் ஈரோடு மாவட்டத்தில் 30 குளம், குட்டை, ஏரி, ஓடை, தடுப்பணைகள், கால்வாய் மற்றும் அணைக்கட்டு போன்ற நீர் நிலைகளை (மொத்தம் 120 ஏக்கர் பரப்பளவு) சுத்தம் செய்து, தூர் வாரி, ஆழப்படுத்தி மற்றும் அகலப்படுத்தி அதிக அளவில் நீர் சேமிக்க வழிவகை செய்துள்ளது.

இந்த நிலையில் மொடக்குறிச்சி வட்டம், கணபதிபாளையம் அருகே உள்ள 22 ஏக்கர் பரப்பளவில் உள்ள கொளத்துபாளையம் குளத்தை தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. ஒளிரும் ஈரோடு அமைப்பின் செயலர் கணேசன், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தனர்.

தூர்வாரும் பணியின் மூலம் கொளத்துபாளையம் குளம் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்படுகிறது. பருவமழை மற்றும் கீழ் பவானி கால்வாய்கள் மூலம் உபரி நீர் சேமிக்கப்பட்டு அருகில் உள்ள கிணறுகள், ஆழ்துளை போர்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு பயனுள்ளதாக அமையும்,

மேலும் குடிநீர் தட்டுப்பாடு முழுவதும் நீங்கும் நிலை ஏற்படும். இந்த திட்டம் ரூ.20 லட்சம் செலவில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

கதிரம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மூலக்கரை தடுப்பணையின் கரைகளில் பனை விதைகள் மற்றும் வேப்ப விதைகள் ஊன்றும் பணி தொடங்கப்பட்டது.

ஒளிரும் ஈரோடு அமைப்பின் துணை தலைவர் வெங்கடேஸ்வரன், அறங்காவலர்கள் சுந்தரம், தர்மராஜ், செயலர், ரவுண்ட் டேபிள்-211 அமைப்பு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதுவரை மூன்று நீர் நிலைகளில் சுமார் 5000 பனை விதைகள் மற்றும் 3000 வேப்ப விதைகள் நடப்பட்டுள்ளன. ஒளிரும் ஈரோடு அமைப்பு இதுவரை தூர்வாரிய 30 நீர் நிலைகளின் இரு கரைகளிலும் மற்றும் காலிங்கராயன் கால்வாய் இரு கரைகளிலும் பனை விதைகள் மற்றும் வேப்ப விதைகள் ஊன்றுவதற்க்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மண் அரிப்பு தடுக்கப்பட்டு கரைகள் பலப்படுகிறது. இயற்கை பாதுகாக்க வழிவகுக்கப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News