செய்திகள்

கேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் - தமிழக அரசு தகவல்

Published On 2018-08-21 22:37 GMT   |   Update On 2018-08-21 22:37 GMT
கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17.51 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன என்று தமிழக அரசு கூறியுள்ளது. #KeralaFlood #Tamilnadu
சென்னை:

கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17.51 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து நிருபர்களுக்கு, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்தியகோபால் அளித்த பேட்டி வருமாறு:-

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்துக்காக 10-ந் தேதியன்று ரூ.5 கோடியையும், 18-ந் தேதியன்று மேலும் ரூ.5 கோடியையும் முதல்-அமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.



அதோடு, 500 டன் அரிசி, 300 டன் பால் பவுடர், 15 ஆயிரம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால், வேட்டி, லுங்கி, போர்வை ஆகியவை தலா 10 ஆயிரம் ஆகியவற்றையும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பணிகளை ஒருங்கிணைந்து நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தோஷ்பாபு, தரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 306 டன் அரிசி, 270 டன் பால் பவுடர் மற்றும் பால் அனுப்பப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு மருந்து, சுகாதாரம் ரீதியிலான உதவிகளை தமிழக அரசுதான் முதன் முதலாக செய்தது. ரூ.2.11 கோடி மதிப்புள்ள மருந்துகள், கிருமி நாசினிகள், திரவ குளோரின் உள்பட பல பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.



கேரளாவில் உள்ள வயநாடு உள்பட சில மாவட்டங்களுக்கு நிவாரண பணிகளுக்காக நமது அதிகாரிகள் குழு சென்றுள்ளது. 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2 டேங்கர் லாரிகளில் திரவ ஆக்சிஜன் ஆகியவற்றையும் அனுப்பியுள்ளோம்.

கேரளாவில் மொத்தம் 226 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் அதன் மூலம் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு, அந்த நோயின் தாக்கம் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்களும், தொண்டு நிறுவனங்களும் கேரளாவுக்கு உதவ முன்வந்தனர். எனவே அவர்கள் அளித்த உதவிப் பொருட்களை வாங்கி 241 லாரிகளில் ஏற்றி அனுப்பிவைத்தோம். அவற்றின் மதிப்பு ரூ.17.51 கோடியாகும். அதிக அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 47 லாரிகள் சென்றன. தேனி மாவட்டத்தில் இருந்து 30 லாரிகள் சென்றன.

அன்புடன் தமிழகம் என்ற ஒரு இணையதளத்தை இதற்காக தொடங்கியிருக்கிறோம். உதவி செய்ய விரும்புகிறவர்கள் இதில் உள்ள தகவல்களின்படி உதவிகளை வழங்க முடியும்.

கேரளாவில் உள்ள நிவாரண ஆணையர் குரியனிடம் பேசும்போது, உணவு அனுப்புவதைவிட போர்வைகள், உடைகள், உள்ளாடைகள், டைபர்கள், டார்ச்லைட், செருப்புகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவை தேவை என்று தெரிவித்தார். சிவகாசியில் இருந்து தீப்பெட்டி அனுப்பப்பட்டது.

முதல்-அமைச்சர் அறிவித்த பொருட்களை அனுப்புவதோடு, தமிழக மக்கள் தரும் நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News