செய்திகள்

மந்தாரக்குப்பம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-08-21 19:03 GMT   |   Update On 2018-08-21 19:03 GMT
மந்தாரக்குப்பம் அருகே இளம்பெண் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.
மந்தாரக்குப்பம்:

மந்தாரக்குப்பம் அருகே உள்ள வடக்கு வெள்ளூரை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது 30), தொழிலாளி. இவருக்கும், மேல்புவன கிரியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோகன்ராஜ் அந்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டு, மேல்புவனகிரியை சேர்ந்த காயத்ரி(22) என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணம் ஆனது முதல் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மோகன்ராஜிக்கும், காயத்ரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மோகன்ராஜ் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இதில் மனமுடைந்த காயத்ரி சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காயத்ரியின் தாய் ஜோஸ்பின்(42) மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் எனது மகளை மோகன்ராஜ் அடித்து கொடுமைப்படுத்தி வந்தார். அவரது சாவில் எனக்கு சந்தேகம் உள்ளது. அதனால் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News