செய்திகள்

புளியரை வழியாக கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது- பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2018-08-21 09:48 GMT   |   Update On 2018-08-21 09:48 GMT
நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். #keralafloods
செங்கோட்டை:

தமிழக, கேரள எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை வழியாக தினமும் 24 மணி நேரமும் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்று வருகின்றன. இந்த பாதையில் கோட்டைவாசல் தாண்டி ஆரியங்காவு வனத்துறை சோதனை சாவடி முதல் தென்மலை வரை மலைப்பாதையாகும். மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகள் இதில் உள்ளன.

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றிச் சென்று வருவதால் இந்த வழியில் அடிக்கடி சாலை பழுதாகும். அதை அடுத்து இந்தச் சாலைகளை கேரள மாநில நெடுஞ்சாலைத் துறையினர் சரி செய்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்துக்கும் அதிகமான அளவு இந்தப் பகுதிகளில் பெய்து வருவதால் கல்லடா தென்மலை 13 கண் பாலம் அருகே சாலையில் விரிசல் உருவாகி அருகிலுள்ள கல்லடா ஆற்றில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு கேரளா மாநிலம் கொல்லம் மாவட்ட நிர்வாகம் இந்த சாலையில் கனரக வாகனங்கள் 10 டன்னுக்கு அதிகமான அளவு கொண்ட பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை பாதை சரி செய்யும் வரை தடை செய்ய உத்தரவிட்ட‌து. இந்த விரிசல் அதிகமானதால் சிறிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் கன மழையினால் பலத்த சேதம் உண்டானது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. லட்சக்கணக்கானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டன. மழை வெள்ளம் காரணமாகவும் அந்த வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மழை வெள்ளம் குறைந்ததையடுத்து மீண்டும் கேரளாவுக்கு இன்று பஸ் போக்குவரத்து தொடங்கியது. எனினும் சாலையில் விரிசல் ஏற்பட்ட பகுதிவழியே பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து செங்கோட்டை பகுதியில் இருந்து செல்லும் பஸ்கள் எம்சன் பகுதிக்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடவும், அங்கிருந்து 200 மீட்டர் தூரம் பயணிகள் நடந்து சென்று மறுபுறம் பஸ் ஏறி செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. #keralafloods
Tags:    

Similar News