செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்ற பெண்ணுக்கு 340 நாள் சிறை

Published On 2018-08-21 09:15 GMT   |   Update On 2018-08-21 09:15 GMT
மது பாட்டில்களை வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்த பெண்ணுக்கு 340 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னை:

தேனாம்பேட்டை சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர் இளவரசி (52).

இவர், டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தார். இதுதொடர்பாக இளவரசி மீது 5 வழக்குகளை தேனாம்பேட்டை போலீசார் பதிவு செய்து இருந்தனர்.சில அடிதடி வழக்குகளும் இவர்மீது உள்ளன.

இந்தநிலையில் கடந்த மாதம், இனி டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்கமாட்டேன். மீறினால் என்மீது குற்ற நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று போலீசாரிடம் இளவரசி எழுதிக் கொடுத்து இருந்தார்.

குற்ற நடைமுறை சட்டப்படி, இதுபோல் எழுதிக் கொடுத்தவர்கள் ஒரு வருடம் எந்தவித தவறும் செய்யவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதை மீறினால் போலீஸ் உதவி கமி‌ஷனரே, குற்றவாளியை குற்ற நடைமுறை சட்டப்படி சிறையில் அடைக்க முடியும்.

ஒரு மாதத்துக்கு முன்பு குற்றம் செய்யமாட்டேன் என்று எழுதிக் கொடுத்த இளவரசி, சமீபத்தில் தேனாம்பேட்டை பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் கலாட்டா செய்துள்ளார். இதையடுத்து இளவரசி மீது தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்தார்.

தொடர்ந்து குற்றத்தில் ஈடுபடும் இளவரசி மீது குற்ற நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.நகர் போலீஸ் துணைக் கமி‌ஷனர் அரவிந்தனுக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கடிதம் எழுதினார்.

அதை ஏற்றுக்கொண்ட துணை கமி‌ஷனர் அரவிந்தன், தேனாம்பேட்டை சத்திய மூர்த்தி நகரை சேர்ந்த இளவரசியை குற்ற நடை முறை சட்டத்தின் 110-வது பிரிவின் படி 340 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி இளவரசி சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
Tags:    

Similar News