செய்திகள்

காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் திடீர் நிறுத்தம்

Published On 2018-08-20 11:57 GMT   |   Update On 2018-08-20 11:57 GMT
காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் திடீர் நிறுத்தப்பட்டதால் பயணிகளிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
காரைக்குடி:

காரைக்குடி நகர் மற்றும் புறநகர் போக்குவரத்து கிளைகளில் இருந்து அண்டை மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயம் தாலுகாவில் உள்ள சில ஊர்களுக்கும், அதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் மற்றும் அதன் அருகில் உள்ள சில ஊர்களுக்கும் நாள்தோறும் இயக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் ஏம்பலுக்கு இயக்கப்பட்டு வந்த 2ஏ மற்றும் 2பி ஆகிய நகரப் பேருந்துகளும், அதே போல் ஏம்பல் வழியாக மணமேல்குடிக்கு இயக்கப்பட்டு வந்த புறநகர் பேருந்தும் நிறுத்தப்பட்டு விட்டது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்களும் மாணவர்களும் காரைக்குடி கிளை மேலாளர் மற்றும் அலுவலகத்தினரை தொடர்பு கொண்டு பல முறை கோரிக்கைகள் வைத்தும் மனுக்கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களில் வசிக்கும் எங்களுக்கு ஒரு அத்தியாவசிய தேவை அல்லது முதல் உதவி மருத்துவம் என்றால் கூட அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட பகுதியான ஏம்பலுக்கு சென்றுதான் எங்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும்.

மேலும் அங்கு உள்ளவர்கள் மருத்துவம் உள்பட அனைத்து வசதிகளுக்காகவும் காரைக்குடிக்குதான் வரவேண்டிய சூல்நிலை உள்ளது.

ஏம்பல் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் காரைக்குடி வந்து செல்கின்றனர்.

இவ்வாறு இரண்டு மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் இயக்கப்பட்டு வந்த பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அந்த வழியாக செல்லும் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசலால் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் நாள்தோறும் சிறு சிறு விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.

எனவே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேருந்து வழித்தடத்தை மீண்டும் தொடங்கவும், அதேபோல் காரைக்குடியில் இருந்து ஏம்பலுக்கு ஜெயங்கொண்டான் வழித்தடத்தில் புதிய நகரப்பேருந்து இயக்க வழியுறுத்தியும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News