செய்திகள்

அண்டக்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2018-08-18 17:47 GMT   |   Update On 2018-08-18 17:47 GMT
அண்டக்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் முஸ்லிம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு அருகே உள்ள பள்ளிவாசலுக்கு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று காலையில் சம்சுதீன் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அதில் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.26 ஆயிரத்தை, மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடையாளிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, மோப்பம் பிடிக்கப்பட்டது. தொடர்ந்து மோப்பநாய் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை ஓடி சென்று நின்றது. மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.26 ஆயிரத்தை கொள்ளை யடித்து விட்டு, தப்பி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சம்சுதீன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் வீட்டின் அருகே வைத்து என்ன நகைகள் உள்ளது என சரிபார்த்து உள்ளனர். அப்போது அவர்கள் தங்க நகைகளை (30 பவுன்) மட்டும் எடுத்துக்கொண்டு, கவரிங் நகைகளை அங்கேயே போட்டு விட்டு சென்றனர். மேலும் அவர்கள் சம்சுதீன் வீட்டில் இருந்து எடுத்து வந்த ஒரு செல்போனையும் கவரிங் நகைகளை விட்டு சென்ற இடத்தில் உடைத்து போட்டு விட்டு சென்று உள்ளனர். மேலும் கவரிங் நகைகள் கிடந்த இடத்தில் ஒரு கிரிக்கெட் பேட்டும் கிடந்தது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News