செய்திகள்

மழையால் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் -சுரேஷ்ராஜன் வலியுறுத்தல்

Published On 2018-08-18 13:01 GMT   |   Update On 2018-08-18 13:01 GMT
குமரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
நாகர்கோவில்:

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எல்லா இடங்களிலும் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

மழை பாதிப்புக்கு உண்டான பகுதிகளில் அரசு விரைந்து நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். தொடர் மழையால் நாகர்கோவிலில் எல்லா பகுதியிலும் உள்ள சாலைகள் பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமாக காணப் படுகிறது. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக சில இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ள பாதையெல்லாம் மிகப்பெரிய குண்டும், குழியுமாகி விபத்துகள் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் உருவாகி உள்ளது. உதாரணத்துக்கு வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வடக்கு பகுதிக்கு செல்லும் பஸ்கள் வடசேரி கிராம நிர்வாக அலுவலகம் வழியாக சி.பி.எச். ரோடு, ஆறாட்டு ரோடு, எஸ்.எம்.ஆர்.வி. சந்திப்புக்கு வருகின்றன. இந்த சாலை அதிகளவில் குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவிக் கின்றன. இதேபோல் தெரிசனங்கோப்பு, வீர நாராயணமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள சாலைகள், திருப்பதிசாரம் முதல் தாழக்குடி செல்லும் சாலை போன்றவை முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இதேபோல் நாகர்கோவில் நகர பகுதியில் அனைத்து சாலைகளும, கடலோர பகுதிகளில் உள்ள சாலைகளும் பழுதடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் குளங்கள் உடைந்து நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். குமரி மாவட்ட கலெக்டர், நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நிர் வாகம், நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து போர்க்கால அடிப்படையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News