செய்திகள்

காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் ஆந்திர பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

Published On 2018-08-18 10:16 GMT   |   Update On 2018-08-18 10:16 GMT
காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் ஆந்திர மாநில பெண்ணிடம் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

ஆந்திர மாநிலம், தாலுமன்சென்டர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பிரகாசம்பாபு (வயது 63). இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் ஆபிரகம். இவர் கேரளாவில் பல் மருத்துவராக உள்ளார்.

நேற்று முன்தினம் ஆபிரகமை பார்ப்பதற்காக ஐதராபாத் - திருவனந்தபுரம் நோக்கி செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சீராலாவில் இருந்து கொல்லம் நோக்கி கணவன்-மனைவி இருவரும் பயணம் செய்தனர்.

அந்த ரெயில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்துவிட்டு, மெதுவாக சென்று கொண்டிருந்தது.

அப்போது இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த கவிதாவின் பையை மர்ம நபர் ஒருவர் பிடித்து இழுத்தார். திடுக்கிட்டு கவிதா முழித்து பார்ப்பதற்குள் அந்த மர்ம நபர் பையை திருடிக் கொண்டு, ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.

கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு சக பயணிகள் உடனடியாக ரெயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

ரெயிலில் ரோந்து பணியில் இருந்த போலீசார் கவிதாவிடம் விசாரித்ததில், பையில் 3 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை அடைந்தது.

இதுகுறித்து பிரகாசம்பாபு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News