செய்திகள்

கவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த ஐகோர்ட் நீதிபதிகள் - தலைமை நீதிபதி மட்டும் பங்கேற்பு

Published On 2018-08-15 13:27 GMT   |   Update On 2018-08-15 13:27 GMT
சுதந்திர தினத்தை ஒட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று அளித்த தேநீர் விருந்தை ஐகோர்ட் தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் புறக்கணித்துள்ளனர். #IndependenceDay #RajBhavan #BanwarilalPurohit #Judges
சென்னை:

சுதந்திர தினம், குடியரசு தினத்தை ஒட்டி மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில், மாநில முதல்வர்கள், ஐகோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், சட்டசபை சபாநாயகர் மற்றும் அரசு உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் இன்று அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

விருந்து முடிந்ததும் ராஜ்பவனில் உள்ள தோட்டத்தில் கவர்னர், முதல்வர், தலைமை நீதிபதி ஆகியோர் ரோஜா செடி நட்டு வைத்தனர். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ளது போல ரோஜா தோட்டம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஐகோர்ட் தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் யாரும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வில்லை. சில நாட்களுக்கு முன்னர் ராஜ்பவனில் நடந்த தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவியேற்கும் விழாவில், நீதிபதிகள் பின் வரிசையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு பின்னால் நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர். 
Tags:    

Similar News