செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு தீர்ப்புக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும் - தினகரன்

Published On 2018-08-15 05:17 GMT   |   Update On 2018-08-15 05:17 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு தீர்ப்புக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும் என்று தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualified

தஞ்சாவூர்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சையில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 16, 17-ந் தேதிகளில் எங்கள் தரப்பில் 2 வக்கீல்கள் ஆஜராகி வாதாடுகிறார்கள். நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும். இந்த ஆட்சி முடிவுக்கு வரும். நாங்கள், ஜெயலலிதாவின் ஆட்சியை அமைத்து நிச்சயம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம்.

இடைத்தேர்தலில் தி.மு.க. தான் வெற்றி பெறும் என திவாகரன் கூறியிருப்பதை பற்றி கேட்கிறீர்கள். பாவம். அவர் உடம்பு முடியாதவர் ஏதோ பேசியிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் பேசிவிட்டு போகட்டும். நாம் செயலில் காண்பிப்போம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் இப்போது அறிவிக்கப்பட மாட்டார்கள். தற்போது எங்கள் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை பணி நடந்து கொண்டு இருக்கிறது.

எம்.ஜி.ஆருக்கு தானாகவே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதேபோல ஜெயலலிதாவுக்கும் மத்திய அரசு தானாகவே முன்வந்து பாரத ரத்னா விருது வழங்கும் சூழ்நிலை உருவாகும்.


ஆறுகளில் செல்லும் தண்ணீர் எல்லாம் கடலில் வீணாக கலக்கிறது. ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை அனைத்து கிளை வாய்க்கால்களையும் தூர்வாரியிருந்தால் தண்ணீருக்காக கையேந்தக்கூடிய நிலை ஏற்படாது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அமைச்சராக 7 ஆண்டுகளாக இருக்கிறார். குடிமராமத்து பணிக்கு ரூ.400 கோடி ஒதுக்கியதாக சொன்னார்கள். கோடை காலத்தில் தான் ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரும் பணியை செய்து கரைகளை பலப்படுத்துவார்கள். ஆனால் இப்போது கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டவுடன் தூர்வாரும் பணியை செய்கிறார்கள்.

அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள்.

மன்னார்குடியில் பணம் கொடுத்து மக்கள் கூட்டத்தை கூட்டியதாக காழ்ப்புணர்ச்சி காரணமாக திவாகரன் கூறுகிறார். லெட்டர் பேடு கம்பெனியில் கூறுவதை எல்லாம் பெரிய கேள்வியாக கேட்கிறீர்கள். கழிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் தான் திவாகரன் கட்சியில் இணைவார்கள்.

மத்திய அரசு அடிமைகளை வைத்து தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. தேவையில்லாத சாலை, மக்கள் விரும்பாத ரோட்டிற்காக ரூ.10 ஆயிரம் கோடி கேட்டு பெற்றுள்ளார்கள். தமிழக மக்களுக்காக எதையும் கேட்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News