செய்திகள்

குமரியில் விடிய, விடிய மழை - பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் திறப்பு

Published On 2018-08-13 11:51 GMT   |   Update On 2018-08-13 11:51 GMT
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று விடிய, விடிய மழை கொட்டியதன் எதிரொலியாக முழு கொள்ளளவை எட்டிய பெருஞ்சாணி அணையில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்திருந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது.

அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 35.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல சுருளோடு, மயிலாடி, ஆனைக்கிடங்கு, குளச்சல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

தொடர்ந்து பெய்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

ஏற்கனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து 763 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 671 கன அடி நீரும், சிற்றார்-1 அணையில் இருந்து 268 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குழித்துறை ஆறு மற்றும் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று 75.65 அடியானது. இதன் காரணமாக பெருஞ்சாணி அணையில் இன்று காலை 1000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேதஅருள்சேகர் கூறுகையில் பெருஞ்சாணி அணையின் பாதுகாப்பு கருதி அங்கிருந்து 1000 கனஅடி நீர் இன்று உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளின் ஓரங்களில், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர் என்றார்.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் தற்போது 21.70 அடியாக உள்ளது.

அணைகளில் அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மழை காரணமாக ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர் பகுதிகளில் செங்கல் சூளை தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. சாமிதோப்பு பகுதியில் உப்பளங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. பாலமோர் உள்பட பல பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணியும் முடங்கி உள்ளது.

மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாலமோர்-35.6, நாகர்கோவில்-11.4, பூதப்பாண்டி -18.6, சுருளோடு -19.2, கன்னிமார்-17.4, ஆரல்வாய்மொழி-9.4, மயிலாடி-18.2, இரணியல்-14.2, கொட்டாரம்-18.6, ஆனைக்கிடங்கு -23.2, குளச்சல்-12.6, குருந்தன்கோடு -17.8, முள்ளங்கினாவிளை -32, புத்தன்அணை -15.2, கோழிப்போர்விளை-22, பேச்சிப்பாறை-15.6, பெருஞ்சாணி -14.8, சிற்றார்1-17.4, சிற்றார்2-12.6, பொய்கை-20, மாம்பழத்துறையாறு-20.
Tags:    

Similar News