செய்திகள்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிக்கு டிசம்பரில் இடைத்தேர்தல்? - தேர்தல் கமி‌ஷன் பரிசீலனை

Published On 2018-08-12 05:35 GMT   |   Update On 2018-08-12 05:35 GMT
டிசம்பர் மாதம் நடைபெறும் 4 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது. #Thiruparankundramconstituency #Tiruvarurconstituency
சென்னை:

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2-ந்தேதி மதுரையில் இறந்தார். அவரைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி இறந்தார்.

இவர்களின் மறைவு காரணமாக திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

எம்.எல்.ஏ. மறைந்தால் அந்த தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் கமி‌ஷன் விதி. அதன்படி இந்த இரு தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளது.



திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கிடையே டிசம்பர் மாதத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் மாதம் நடத்த தேர்தல் கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகிறது.

வழக்கமாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் போது நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டசபை மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் டிசம்பர் மாதம் 4 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதிகளும் காலியாக உள்ளது. ஆனால் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால் 18 தொகுதிகளையும் காலியிடம் என அறிவிக்கக்கூடாது என்று கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

எனவே இந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தால் 18 பேரும் எம்.எல்.ஏ.வாக தொடர வாய்ப்பு கிடைக்கும். எதிராக தீர்ப்பு வந்தால் எம்.எல்.ஏ.வாக நீடிக்க முடியாமல் காலியிடமாக அறிவிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். இதனால் அந்த தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

தகுதி நீக்க வழக்கில் விசாரணை நீடித்தால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது உறுதி என்பதால் அரசியல் கட்சியினர் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். #Thiruparankundramconstituency #Tiruvarurconstituency

Tags:    

Similar News